கதம்பவன வாஸினி
A meditative musing
By
கலாவாணிதாசன்
SRK IYER
உளவியல் ஆலோசகர்
ஸ்ரீ அம்பிகையை கதம்பவன
வாஸினி என்று கூறுவார்கள். அதாவது கதம்ப வனத்தில் வசிப்பவள் என்று பொருள்.
கதம்ப வனம் என்பது
கல்பகம், சந்தானம், ஹரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் என்று சொல்லப்படுகின்ற
தெய்வீக தேவதாருக்கள் நிறைந்த வனம் என்று பொருள். அதாவது இந்த தெய்வீக மரங்கள்
எல்லாம் நாம் மனதில் நினைத்ததை தரும் வல்லமை பொருந்தியது என்று கூறுவார்கள்.
இந்த கதம்ப வனம் என்பது
மானசீக விருத்திகள் என்பதாக எனது பரமேஷ்டி குருநாதர் பூஜ்யஸ்ரீ சிதானந்தநாதர்
அவர்கள் தனது ஸ்ரீவித்யா கீதை என்று நூலின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது மனமும் அதில்
கொள்ளுகின்ற எண்ணமுமே நமது வாழ்வை தருவது என்று பொருள் கொள்ளலாம். நாம்
கொள்ளுகின்ற ஆக்கபூர்வ எண்ணங்கள் நமது வாழ்வில் வசந்தத்தையும் வளத்தையும் தரவல்லது
என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
எண்ணுகின்ற எண்ணம்
தொடர்ந்து எண்ணப்பட்டுக்கொண்டே இருந்தால் எண்ணப்பட்ட எண்ணம் வாழ்வில் நடப்பது
திண்ணம் என்கின்ற உளவியல் கருத்தை நமது முன்னோர்கள் மிகவும் அருமையாக ஒரு உள்ள
உன்னத உருவகமாக கூறியுள்ளார்கள்.
எண்ணமே ஒருவரின்
வாழ்க்கையை உருவாக்குகிறது. வளமாக்குகிறது.
நல்ல எண்ணங்கள் வாழ்வில் நல்வழியை ஏற்படுத்துகின்றது. ஒளி ஏற்றி
விடுகின்றது.
அப்படிப்பட்ட நல்
எண்ணங்களை உருவாக்குபவளாக அம்மை இருக்கிறாள் என்பதாக நாம் இந்த மந்திரத்தை
புரிந்துகொள்ளலாம்.
அதாவது அம்மையே மனதில்
எழும் நல் எண்ணங்களை வாழ்வில் விளைவித்து வளமாக்கி தருபவளாகவும் இருக்கிறாள்
என்கின்ற அருமையான அம்மையின் அருள் சுரக்கும் கருணை மனதை இந்த மந்திரத்தின் மூலம்
நாம் புரிந்துகொள்ளலாம்.
ஸ்ரீ அம்மையே போற்றி
அருள் சுரக்கும் அன்னையே
போற்றி
நலம் தரும் நாயகியே
போற்றி
வளம் தரும் வல்லமையே
போற்றி
கவின்முகில் கலாவாணியே
போற்றி
Comments
Post a Comment