கடக்க முடியாதவைகளையெல்லாம்
கடக்க வைப்பாள் அன்னை ஸ்ரீ கலாவாணி
By
கலாவாணிதாசன்
SRK IYER
வாழ்க்கை என்பது நீண்ட
நெடிய பாதை. கரடு முரடான பாதையாக சில சமயங்களில் சிலரது வாழ்வில் அமைந்துவிடுவது
உண்டு. பிரச்னைக்கு மேல் பிரச்னையாக ஏற்பட்டுவிடுவது உண்டு.
சில சமயங்களில் நாம்
செல்லும் பாதை மூடப்பட்டு விட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டுவிடுவதும் உண்டு.
எந்த பக்கம் திரும்பினாலும்
மூடிய கதவுகளே நம்மை வரவேற்பதைப்போல ஒரு தோற்றம் ஏற்படுவதுண்டு.
நம் பிரச்னைக்கு தீர்வே
கிடையாதா என்ற ஏக்கம் நமக்கு ஏற்படுவதுண்டு.
ஸ்ரீ வித்யா கீதை எனும்
ஒரு சிறப்பான அம்மையின் சிறப்புகளை கூறும் ஒரு நூலில் ஸ்ரீ அன்னை கலாவாணி
கூறுகிறாள்:
“ஏதன்மே
முக்யமைஸ்வர்யம்
துர்க்கடார்த்த விபாவனம்”
இதன் பொருள்: நடக்க
கூடாதவைகளையும் (அதாவது நடக்கவே முடியாது என்று நினைப்பவைகளையும்) நடத்தி
முடிப்பதே என்னுடைய முக்கிய ஐஸ்வர்யம் என்று அன்னை ஸ்ரீ கலாவாணி கூறுகிறாள்.
மேற்கூறிய பாடலின்
பொருளாக கொள்வது என்னவென்றால், வாழ்வில் வரும் சங்கடங்களும் அம்பிகையின் ஐஸ்வர்யம்
என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் அதன்
மூலம் ஞானமடையலாம் என்பதால் சங்கடங்களும் ஸ்ரீ அம்மையின் ஐஸ்வர்யம் என்றும் ஒரு
பொருள் சொல்லப்படுகின்றது. இதையே ஆங்கிலத்தில் TOUGH LOVE என்று
சொல்லப்படுகின்றது. அதாவது கண்டிப்பு காட்டும் அன்னையே கருணையும் பொழிவாள் என்று
புரிந்துகொள்ளலாம்.
ஆயினும், இதற்கு பொருளாக,
விதி வசத்தால் ஏற்பட்டுவிட்ட சங்கடங்களை வாழ்வில் நடக்கவே முடியாது என்று
கருதப்படுபவைகளையும் அன்னை ஸ்ரீ கலாவாணி நடத்திவைப்பாள் என்று நாம் பொருள்கொள்ளலாம்.
அதாவது, அதிசயங்களை ஸ்ரீ
கலாவாணி நம் வாழ்வில் நடத்திக்காட்டுவாள்.
ஸ்ரீ அம்மை மீது அளவில்லா
பக்தியும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டால் ஸ்ரீ அம்மை கடக்கமுடியாதவைகளை எல்லாம்
கடக்க வைத்து நம்மை ஐஸ்வர்யம் என்ற பாதையில் வாழ்வில் வளம் என்ற பாதையில்
நடக்கவைப்பாள் என்றே நாம் பொருள் கொள்ளலாம்.
Comments
Post a Comment